அரசின் அறிவிப்பில் மாற்றமில்லை.. அரியர் தேர்வு விவகாரத்தில் மீண்டும் அமைச்சர் உறுதி!
அரியர் தேர்வு ரத்து விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழக அரசின் முடிவு தவறானது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் பதிலை நீதிமன்றம் கேட்டுள்ளது. இதற்கிடையே, இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், திமுக எம்எல்ஏ பொன்முடி அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அரசு விளக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு பதில் அளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ``அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
எது நடக்குமோ அதை மட்டுமே கூறும் அரசு என்றால் அது அதிமுக அரசுதான். மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அறிவித்த அறிவிப்பு முதல்வரின் அறிவிப்பு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உயர்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
மாணவர் சமுதாயத்தை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. AICTE சேர்மன் சூரப்பாவுக்கு தனது சொந்த மின்னஞ்சலில் இருந்துதான் மெயில் அனுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ மெயிலில் இருந்து அனுப்பவில்லை. அரசுக்கும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமாக தகவலும் வரவில்லை. எனவே மாணவர்கள் இது தொடர்பாக அச்சம் கொள்ள தேவையில்லை" என்று பேசியுள்ளார்.