கொரோனாவின் கொடூரம்... வளைகுடா, ஆசிய நாடுகளில் மட்டும் 5000 இந்தியர்கள் உயிரிழப்பு!
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்த் தொற்று பரவலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் இந்தியாவும்தான் இருக்கின்றன. அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வரை இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இது வரை 5 லட்சத்து 14,208 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இன்னும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் கொஞ்சம் கூட குறையாமல் இருந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டாலும், பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவர்களில் பலர் அங்கேயே தங்கியிருக்கின்றனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இந்தியர்கள் பற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், உயிரிழந்தவர்களில், 1807 பேரின் உடல்கள் மட்டுமே இந்தியா கொண்டுவரபட்டுள்ளது என்றும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.