டிடியாக ரூ.10 கோடி.. சசிகலாவை வெளியில் கொண்டுவர மும்மரம்!
பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமீபத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, சிறையின் மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் கண்காணிப்பாளர் லதா அளித்த பதிலில், ``சசிகலா தண்டனைக் காலத்தின்படி 2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு உள்ளது" என்றதுடன், ``நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத்தைச் செலுத்தாவிட்டால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டி இருக்கும்'' என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது சசிகலா தரப்பினர் இந்த அபராத தொகையைச் செலுத்தப் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சிறை கண்காணிப்பாளரைச் சந்தித்து, அபராதத் தொகையைச் செலுத்துவதற்கான வழிமுறைகளை விசாரித்துள்ளனர் அவர்கள். ``அபராதத் தொகையை வரைவோலையாக எடுத்து சிறையில் நேரடியாகச் செலுத்தலாம் அல்லது நீதிமன்றம் மூலம் செலுத்தலாம்'' என்று சிறை நிர்வாகத்தினர் கூற தற்போது அதனைச் செலுத்த சசிகலா தரப்பினர் மும்மரமாகியுள்ளனர். ஏற்கனவே இந்த பத்து கோடியை சசிகலா அக்கவுண்டில் செலுத்தப்பட்ட நிலையில், அதனை இப்போது வரைவோலையாக எடுத்துத் தாக்கல் செய்ய இருக்கின்றனர். இதைத் தாக்கல் செய்த பின்னரே சிறை நிர்வாகம் விடுதலைக்கான உறுதியான தேதியை முடிவு செய்யும்.