ஜிஎஸ்டி, விவசாயப் பிரச்சனைகளை எழுப்பும் தமிழக எம்.பி.க்கள்...
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். கொரோனா பிரச்சனையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேற்று கடுமையாக மத்திய அரசை விமர்சித்துப் பேசினார்.
இந்நிலையில், அவர் இன்று தேசிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிவிக்கை குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரி, ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை குறித்து விவாதிக்க வேண்டுமென்று கோரி, ஒத்தி வைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.அதே போல், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மத்திய அரசின் வேளாண் கொள்கைகள் மற்றும் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து காவலில் தலைவர்கள் வைக்கப்பட்டுள்ள பிரச்சனை குறித்து விவாதிக்க திரிணாமுல் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுகதா ராய் ஒத்தி வைப்பு தீர்மானம் அளித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரில் 6வது ஆட்சிமொழியாகப் பஞ்சாபியை அறிவிக்க வேண்டுமென்று ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை அகாலிதளம் உறுப்பினர் சுக்தேவ்சிங் தின்சா கொடுத்துள்ளார். பாஜக மாநிலங்களவை உறுப்பினர் மகேஷ் போதாதர், கிழக்கு மாநிலங்களில் மாடுகள் கடத்தப்படுவது குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் அளித்திருக்கிறார்.