சிரிப்பு போச்சு, சிறையில் அழுது புலம்பும் நடிகை
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சினிமா துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் போதைப் பொருள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் புகார் கூறப்பட்டு வந்தது.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தான் காரணம் எனப் பேசப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புத் துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து பெங்களூருவில் நடந்த அதிரடி சோதனையில் கன்னட டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் பிடிபட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் கன்னடம் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோருக்கு இக்கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் ரவிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரபல கன்னட நடிகைகளான ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு இக்கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த நடிகைகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பிரபல நடிகைகள் கைதானது கன்னட சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ராகினி திவேதி பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் அடிக்கடி போதை பார்ட்டி நடத்தி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் போலீசார் கைது செய்யும்போது அனைவருக்கும் டாட்டா காண்பித்துச் சிரித்தபடி சென்ற நடிகை ராகினி திவேதி இப்பொழுது சிறையில் அழுது புலம்புவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள இவர், கொரோனா காலம் என்பதால் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குச் செல்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்காக ராகினி திவேதியை பெங்களூரூ மல்லேஸ்வரத்தில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அப்போது பரிசோதனைக்காகத் தனது சிறுநீரில் தண்ணீரைக் கலந்து கொடுத்ததை டாக்டர்கள் கண்டுபிடித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.