2021 தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி.. மத்திய அமைச்சர் தகவல்..

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. புதிதாகப் பாதிப்போரின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் நேற்று(செப்.16) மட்டும் புதிதாக 97,894 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 51 லட்சத்து 18 ஆயிரத்து 250 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. தற்போது 10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் நோய்க்கு 1132 பேர் பலியாகியுள்ளனர். மொத்தத்தில் 83,198 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதியன்று, சீனாவின் உகானில் கொரோனா தொற்று பரவுவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. அப்போதே மத்திய அரசு வேகமாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது. அப்போது இந்தியாவில் முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள், வென்டிலேட்டர்கள் போன்றவை போதிய அளவில் இல்லை. அதனால் நோய் பரவும் போது பெரிய பிரச்சனை ஏற்படும் என்று கணித்தார்கள். ஆனால், அது எல்லாம் பொய்த்து விட்டது. கொரோனாவுக்கு தடுப்பூசி, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

More News >>