கொரோனா பாதித்ததால் தற்கொலை செய்யப் போவதாக மனைவியிடம் கூறி வாலிபர் செய்த காரியம் என்ன தெரியுமா?
தனக்கு கொரோனா பாதித்திருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் கூறிவிட்டு காதலியுடன் குடும்பம் நடத்தி வந்த 'பலே' வாலிபர் பிடிபட்டார்.உலகம் முழுவதும் கொரோனா படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. லாக் டவுன் காரணமாகப் பல மாதங்களாக அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள் ஏராளம். கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை, பெற்றோர், பிள்ளைகளுக்கு இடையே பிரச்சினை என எங்குப் பார்த்தாலும் பிரச்சினைகள் தான்.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது மனைவியிடம் தனக்கு இருப்பதால் தற்கொலை செய்யப் போவதாகக் கூறி காதலியுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.நவி மும்பையைச் சேர்ந்த 28 வயதான அந்த வாலிபர் அங்குள்ள தலோஜய் என்ற இடத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி வழக்கம் போல வேலைக்குச் சென்ற இவர், தனது மனைவிக்கு போன் செய்து தனக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மீண்டும் தொடர்பு கொண்டபோது அந்த வாலிபரின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மறுநாள் அங்குள்ள ஒரு பகுதியில் அந்த வாலிபரின் பைக் மற்றும் அவர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லும் பேக், பர்ஸ் ஆகியவை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் உள்பட அனைத்து இடங்களிலும் அவரை போலீசார் தேடி வந்தனர்.
ஆனால் கடந்த 2 மாதங்களாக அந்த வாலிபர் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில் அவர் இந்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தபோது, அங்கு அந்த வாலிபர் தனது காதலியுடன் வேறு பெயரில் குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து அவரது மனைவியிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த 'பலே' வாலிபர் அவரது மனைவியின் கஸ்டடியில் உள்ளார்.