ஊட்டியில் திட்டமிட்டு நடக்கும் பெண்கள் விடுதி சம்பவத்தில் மெக்ஸிகோ நடிகை ரி என்ட்ரி..கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற ஹீரோவின் திரில்லர்..
கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற நடிகர் நடிகைகள் பலர் தமிழில் திரையுலகில் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கின்றனர். அப்படி பயிற்சி பெற்ற ஹீரோவுடன் தற்போது மெக்ஸிகோவை சேர்ந்த நடிகை ஒருவர் தமிழ் படத்தில் நடிக்கிறார்.ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப் பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். கதாநாயகியாக மெக்சி கோவை சேர்ந்த நடிகை ' ரி ' என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே காஞ்சனா 3 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் மற்றும் நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆரம்பம், அனேகன் என பிரமாண்ட படங்களில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷிடம் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகவும்,ஆதி நடிக்கும் ' பாட்னர் ' படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணி குமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார். இவர் தற்போது விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களின் எடிட்டராக வலம்வரும் ரூபனின் சீடர் என்பது குறிப்பிடத் தக்கது.இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர் பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வு தான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். வரும் அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.