விவசாயிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு.. பதவியை துறக்கிறார் ஹர்சிம்ரத் சிங் கவுர் பாதல்?!
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி, வேளாண்மைச் சட்டம் குறித்த பிரச்சனைகள் மீது விவாதிக்க திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்தி வைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அத்தியாவசிய பொருட்கள் மசோதா, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா என்று விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை தாக்கல் செய்தது மத்திய அரசு. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கம்போல எதிர்க்கட்சிகள் மட்டுமே இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நினைத்த நிலையில் புதிய டுவிஸ்ட்டாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, பாஜகவின் நெருங்கிய நட்பு கட்சியான சிரோமணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதில் மற்றுமொரு அதிர்ச்சியாக, சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் சிங் கவுர் பாதல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று அவரின் கணவரும் சிரோமணி அகாலிதளத்தின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் அதிரடியாக அறிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.