கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் தொடரும் கொரோனா...
சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை உள்பட 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் நீடித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் குணம் அடைகிறார்கள். உயிரிழப்பும் சமீப காலமாகக் குறைந்துள்ளது. எனினும், சென்னை மற்றும் இதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை, சேலம் போன்ற கொங்கு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று தற்போதும் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று(செப்.17) 5560 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 5 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 25,420 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.
மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5524 பேரையும் சேர்த்து, இது வரை 4 லட்சத்து 70,192 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே சமயம், கொரோனாவால் உயிரிழப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். நோய்ப் பாதிப்பால் நேற்று 59 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8618 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்திலும் தொடர்ந்து அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஓரளவுக்குப் பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னையில் நேற்று 992 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 206 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 52,567 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 283 பேருக்கும், கடலூரில் 206 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 239 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 31,712 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 29,446 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், திருப்பூரில் 191 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தமிழகத்தில் நேற்று மட்டும் 82,683 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 60 லட்சத்து 23 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.