சூப்பர் -90 வெடிபொருட்கள் புல்வாமா போன்று கரேவா அட்டாக்?!.. சதியை முறியடித்த ராணுவம்

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது. காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறையில் சொந்த ஊர் சென்று மீண்டும் பணிக்குத் திரும்பும்போது ஜம்மு அல்லது ஸ்ரீ நகரில் சில நாட்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.

பின்னர் அனைவரையும் மொத்தமாக பணியிடங்களுக்கு ஏராளமான வாகனங்களில் அணிவகுப்பாக அனுப்புவது வழக்கமாக இருந்து வந்தது. அப்படி அணிவகுப்பாக 78 வாகனங்களில் 2500 வீரர்கள் செல்லும் போது தான் இந்தக் கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.இந்த வழக்கில் சமீபத்தில்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு தாக்குதல் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அதுவும் இதே புல்வாமா அருகில் உள்ள இடத்தில்.

புல்வாமாக்கு மிக அருகில் உள்ள கரேவா பகுதியில் ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 கிலோ வெடிப்பொருட்கள் நேற்று இந்திய ராணுவத்தினர் கண்டறிந்தனர். டேங்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, இந்த வெடிப்பொருட்களில், 125 கிராம் எடையுள்ள 416 வெடிபொருள் பாக்கெட்டுகளும், 50 வெடிகுண்டுகளும் இருந்துள்ளன. இந்த வெடிபொருட்கள் சூப்பர் -90 அல்லது எஸ் -90 என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களை வைத்து புல்வாமா தாக்குதல் போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்த, சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றை தற்போது இந்திய ராணுவம் முறியடித்து வெடிபொருட்களைக் கைப்பற்றியுள்ளது.

More News >>