தனது பசுவை கொன்ற சிறுத்தையை ஒன்றரை வருடங்களாக காத்திருந்து பழி வாங்கிய வாலிபர்
தனக்குச் சோறு போட்டு வந்த பசுவைக் கொன்ற சிறுத்தையை ஒன்றரை வருடங்களாகக் காத்திருந்து ஒரு வாலிபர் பழி வாங்கிய சம்பவம் மூணாறில் நடந்துள்ளது.மூணாறு அருகே உள்ள கன்னிமலையில் கண்ணன் தேவன் தேயிலை நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு தேயிலை எஸ்டேட் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த தேயிலை எஸ்டேட்டை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு சிறுத்தை பொறியில் சிக்கி இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். மூணாறு வனத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பொறியில் சிக்கியதால் தப்பிக்க முயற்சிக்கும் போது அதிலிருந்த கம்பி குத்தி சிறுத்தை இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் முதலில் கருதினர். ஆனால் பின்னர் நடந்த பிரேதப் பரிசோதனையில் சிறுத்தையின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த குமார் (34) என்பவர் ஒரு பசுவை வளர்த்து வந்தார். இதிலிருந்து கிடைக்கும் பாலை விற்றுத் தான் அவர் பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் அருகிலுள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த குமாரின் பசுவைச் சிறுத்தை அடித்துக் கொன்றது.
இதை அறிந்த குமார் மிகுந்த வேதனையடைந்தார். தனது பசுவைக் கொன்ற சிறுத்தையைப் பழிவாங்க அன்றே அவர் சபதம் எடுத்தார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்களிடம், 'அந்த சிறுத்தையை நான் பழிவாங்காமல் விடமாட்டேன்' என்று கூறிவந்தார். இதற்காக அவர் அப்பகுதியில் ஒரு பொறியும் வைத்திருந்தார். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தினமும் அங்குச் சென்று சிறுத்தை சிக்கி உள்ளதா என்று பார்த்து வந்தார். சம்பவத்தன்று சென்று பார்த்தபோது அந்த பொறியில் சிறுத்தை சிக்கியிருந்தது தெரியவந்தது. பொறியில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்த அந்த சிறுத்தையை குமார் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். அப்பகுதியினரிடம் நடத்திய விசாரணையில் குமாரின் நடவடிக்கைகள் குறித்த அறிந்த வனத்துறையினர் அவரிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து வனத்துறையினர் குமாரைக் கைது செய்தனர்.