பிரேதக்கிடங்கில் இருந்த பிஞ்சு குழந்தையின் உடல்..மறந்துபோன மருத்துவமனை ஊழியர்கள்...!
பிஞ்சு குழந்தையின் உடல் 5 நாளாக பிரேதக்கிடங்கில் இருந்ததை மருத்துவமனை ஊழியர்கள் மறந்து போன சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனை உள்ளது. கடந்த 11ம் தேதி இந்தூரில் ஒருபகுதியில் முட்புதரில் அனாதையாக கிடந்த ஒரு பிஞ்சு குழந்தையை அப்பகுதியினர் மீட்டு அந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தால் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் அந்த குழந்தை இறந்து விட்டது.குழந்தை குறித்த எந்த விவரமும் இல்லாததால் அந்த பிஞ்சு குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் பிரேத கிடங்கில் வைத்தனர். இதன்பிறகு அந்த சம்பவத்தையே மருத்துவமனை ஊழியர்கள் மறந்து விட்டனர். இந்நிலையில் 17ம் தேதி போலீசார் விசாரிக்க வந்த போதுதான் அந்த குழந்தை இறந்த விவரம் போலீசுக்கு தெரியவந்தது. குழந்தையின் உடல் எங்கே என்று கேட்டபோது தான் உடல் பிரேத கிடங்கில் இருப்பது மருத்துவமனை ஊழியர்களுக்கு நினைவுக்கு வந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அந்த குழந்தையின் உடல் கொண்டு செல்லப்பட்டது.