பீகாரில் கோசி ரயில் மகாசேது பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்..
பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோசி ரயில் மகா சேது பாலத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இன்னும் 2, 3 மாதங்களில் அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் நிதிஷ்குமார் தலைமையில் அதே கூட்டணி தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்நிலையில், பீகாரில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கி வைத்து வருகிறார். இன்று(செப்.18) பகல் 12.10 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில், பீகார் மாநிலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கோசி ரயில் மகா சேது பாலத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் 2 புதிய ரயில் பாதைகள், 5 மின்சார ரயில் திட்டங்கள், ரயில்வே பணிமனை உள்பட 12 புதிய ரயில் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
கோசி ரயில் மகா சேது பாலம், ரூ.516 கோடி மதிப்பீட்டில் 1.9 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ளது. கடந்த 1934ம் ஆண்டில் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது, கோசி ஆற்று வெள்ளத்தில் அப்போதிருந்த ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டன. அதன்பிறகு நீண்ட காலமாக மீண்டும் அந்த ரயில் பாதை அமைக்கும் பணியில் தடங்கல் ஏற்பட்டு வந்தது.
தற்போது புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டு, பாலத்தின் கட்டுமானப் பணிகள், கோவிட் தொற்று காலத்திலும் தொய்வில்லாமல் நடைபெற்றுள்ளது. பீகாரில் நிர்மாலி மற்றும் சாரைகார் (Saraigarh) இடையே, இது வரை 298 கி.மீ. தூரத்திற்கு சுற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருந்தது.
புதிய மகாசேது பாலத்தின் மூலம், இந்த பயண தூரம் வெறும் 22 கிலோ மீட்டராக குறைந்து விடுகிறது. இதன் மூலம் அந்த கோசி பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் 86 ஆண்டு கனவு நனவாகி உள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும், புதிய பாலத்தின் பயன்பாட்டால், கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற நீண்ட தூர பயண நேரமும் குறைகிறது. பிரதமர் நிகழ்ச்சியில், ஹாஜிபுர் -கோஷ்வார்- வைஷாலி ரயில் பாதை, இஸ்லாம்பூர் - நடேஷார் ரயில் பாதை ஆகிய இரண்டு புதிய ரயில் பாதைகளையும் தொடங்கி வைத்தார். முஷாபர்நகர்- சீதாமார்கி, சமஸ்டிபூர்- ககாரியா உள்பட ஐந்து மின்சார ரயில் திட்டங்கள், ரயில் பணிமனை உள்ளிட்ட 12 புதிய ரயில்வே துறை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பாட்னாவில் இருந்தபடி பீகார் மாநில முதல்வர் திரு.நிதிஷ்குமார் மற்றும் அமைச்சர்கள், ரயில்வே துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.