ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாயில் திடீர் தடை

கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளை இந்தியாவிலிருந்து துபாய்க்கு அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்களுக்குத் துபாயில் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 'வந்தே பாரத் மிஷன்' என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தியது.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுகின்றனர். இதேபோல இந்தியாவில் சிக்கியுள்ளவர்களும் அந்தந்த நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். பயணத்திற்கு முன் பயணிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களை மட்டுமே விமானத்தில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெய்ப்பூரில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கொரோனா பாதித்த ஒரு பயணியைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருடன் சென்ற ஒரு பயணிக்கும் நோய் பரவியது. இதையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திற்கு 15 நாட்கள் துபாயில் தரையிறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்கள் சார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. துபாயில் இருந்து இந்தியா திரும்ப வேண்டிய பயணிகள் சார்ஜா செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

More News >>