24 மணி நேரத்தில் 35,000 பேர் 72 மணி நேரத்தில் 1,00,000 பேர்.. ஸ்டாலின் திட்டத்துக்கு கைமேல் பலன்!
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளன்று திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன்' என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது. அதன்படி, இயக்கத்தை ஆரம்பித்த 24 மணி நேரத்திற்குள் 35,000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் சேர்ந்துள்ளனர் என்று தகவல் நேற்று வெளியாகியது. மேலும் அடுத்த 45 நாட்களில் குறைந்தது 25 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதை இலக்காக கொண்டு இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. உறுப்பினர் கட்டணம் ஏதும் இல்லாமல், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்சியில் எளிதாக உறுப்பினராகும் வகையில் ஆன்லைன் போர்ட்டல் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றினால் போதும், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் அதை சரிபார்த்து உடனே உறுப்பினர் கார்டு கொடுப்பார்கள் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ``இந்த இயக்கத்தின் நோக்கம், யார் கட்சியில் சேர விரும்புகிறார்களோ, அவர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது.
லாக் டவுனால், மக்களுடன் பழகுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. ஆனால் இத்திட்டம் மக்களுடன் தொடர்பு கொள்ள எங்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக தற்போது பேசியுள்ளார். ``முன்னெடுப்பை அறிமுகம் செய்த 72மணி நேரத்தில் 1,00,000பேர் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தமிழ் மக்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கான நற்சான்று. இதனைச் சாத்தியப்படுத்தியோர் அனைவர்க்கும் எனது நன்றிகள். இதே வேகம் தொடரட்டும்" என்று கூறியுள்ளார்.