ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விதித்த தடை நீக்கம்

கொரோனா பாதித்த பயணிகளை கொண்டு சென்றதால் துபாயில் தரை இறங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் கொரோனா பாதித்த பயணிகளையும் கொண்டு சென்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து துபாயில் தரையிறங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறை 15 நாட்களுக்கு தடை விதித்தது.

இதையடுத்து துபாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சார்ஜாவுக்கு திருப்பி விடப்பட்டன. இந்நிலையில் இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் துபாய் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் விமான நிலைய ஊழியர்களின் தவறு தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்தது. இதையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விதித்திருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் நாளை முதல் வழக்கம்போல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் துபாய்க்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>