குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி.. ஒடிசா மாணவர்கள் கண்டுபிடிப்பு..

புவனேஸ்வர் ஐ.ஐ.ஐ.டி மாணவர்கள், குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 50 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. இந்நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதால், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுப்பது உள்படப் பல பணிகளுக்கு ரோபோக்களை கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த வகையில், குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி அளிக்கும் கருவியை ஒடிசா மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்று அதிகமானால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அந்த நோயாளிகளுக்குச் செயற்கை சுவாசம் அளிப்பதற்கு வென்டிலேட்டர் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், புவனேஸ்வரத்தில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐஐஐடி) பயிலும் மாணவர்கள், பப்பிள் ஹெல்மெட் என்ற பெயரில் புதிய சுவாசக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து மாணவர் அனன்யா அப்ராம் கூறியதாவது:வென்டிலேட்டர் வசதிக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். இதைக் குறைக்கும் வகையில் பப்பிள் ஹெல்மெட் என்ற சாதனத்தைக் கண்டுபிடித்திருக்கிறோம். மிகக் குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதியை இது அளிக்கும்.

இதை 2 மருத்துவமனைகளில் சோதனை செய்திருக்கிறோம். மேலும் சில மருத்துவமனைகளில் சோதனை செய்து, அதற்கேற்ப மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம். இது வீடுகளில் கூட நோயாளிகள் பயன்படுத்தலாம். ஏழை நோயாளிகளுக்கு இது உதவியாக இருக்கும்.இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.

More News >>