மேற்கு வங்கம், கேரளாவில் 9 அல்- குவைதா தீவிரவாதிகள் கைது என்ஐஏ அதிரடி
மேற்கு வங்க மாநிலம், கேரளா உள்பட 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் 9 அல்- குவைதா தீவிரவாதிகள் பிடிபட்டது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாகக் கேரளாவில் ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத், கேரள மாநிலம் எர்ணாகுளம் உள்பட 12 நகரங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவிலிருந்து 9 அல்-குவைதா தீவிரவாதிகள் பிடிபட்டனர். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் இருந்து 6 பேரும், எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரிலிருந்து 3 பேரும் பிடிபட்டுள்ளனர்.
கேரளாவில் பிடிபட்ட 3 பேரும் கடந்த பல வருடங்களாக பெரும்பாவூரில் வெளிமாநில தொழிலாளர்கள் போலத் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர். இவர்களில் 2 பேர் கட்டிடத் தொழிலாளர்களாகவும், ஒருவர் அங்குள்ள ஒரு துணிக்கடையிலும் பணிபுரிந்து வந்தனர். இவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. கேரளாவில் பிடிபட்ட 3 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் டெல்லி உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதற்காக இவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்தியாவில் 9 அல்- குவைதா தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.