37 ஆண்டுக்கு பின் மீண்டும் முருங்கைக்காய் சமாச்சாரம்... புதிய முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும் ஜோடி யார் தெரியுமா?

சினிமாவில் சமுதாய புரட்சி குடும்ப புரட்சி எனப் பல புரட்சிகள் நடந்திருக்கின்றன. 1983ம் ஆண்டு ஒரு புரட்சி நடந்தது. ஒரு முருங்கைக்காய் 100 ரூபாய்க்கு விற்றது. என்ன காரணம் என்பது இப்போதுள்ள இளசுகளுக்குத் தெரியாது. அந்த விஷயத்துக்கு இது பலம் சேர்க்கும், சக்தி கொடுக்கும் என்று இயக்குனர் கே.பக்யராஜ் ஒரு புதிய கண்டுபிடிப்பை முன் வைத்தது முருங்கைக்காய் விலை ஏற்றத்துக்குக் காரணம்.

முந்தானை முடிச்சு என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் பாக்யராஜ். இதில் ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். கதைப்படி விடாப்பிடியாகத் தன்னை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஊர்வசியை பாக்யராஜ் தொடமாட்டார். முதலிரவுக்கும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஊர்வசிக்கு ஒரு பெண் ஐடியா தருவார். முருங்கைக்காய் சமைத்துப்போடு பூனைக்குட்டி மாதிரி புருஷன் உன்னையே சுற்றுவார் என்று ஒரு ரகசியத்தைச் சொல்ல. அதுவா சங்கதி என்று கேட்டுக்கொண்டு வீட்டுக்கு வருவார்.

அன்றைக்குச் சமையல் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் கூட்டு, முருங்கைக்காய் பொரியல் என எல்லாமே முருங்கைக்காய் மயமாக இருக்கும். என்ன எல்லாமே முருங்கைக்காய் சமாச்சாரமாக இருக்கிறதே என்று அப்பாவியாகக் கேட்டு விட்டு சந்தேகத் தோடு சாப்பிடுவார் பாக்யராஜ். அன்று இரவு பாக்யராஜ் தூக்கம் வராமல் நெளிவார். அத்துடன் சாந்தி முகூர்த்தம் அரங்கேறிவிடும்.ஒரு முருங்காய் விஷயத்தை வைத்து மட்டுமல்லாமல் படம் முழுக்கு குடும்ப சென்டிமென்ட் வைத்து 200 நாட்கள் கடந்து இப்படம் ஓடி வெற்றி பெற்றது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் முந்தானை முடிச்சு படத்தைக் கொண்டு வருகிறார் கே.பாக்யராஜ். அப்போது ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படம் உருவானது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் படம் ரீமேக் ஆனது.

தற்போது உருவாகும் புதிய முந்தானை முடிச்சு படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இத்திரைப் படத்தை 2021-ம் ஆண்டு திரைக்குக் கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.37 வருஷத்துக்கு முன்பு முருங்கைக்காய் விலையை ஏற்ற வைத்த இப்படம் மீண்டும் முருங்கைக்காய் விலையை ஏற்ற வைக்குமா அல்லது புதுசா ஏதாவது காய் கண்டுபிடித்திருக்கிறாரா என்பது படம் வந்தால் தெரியும்.

More News >>