வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்.. ஸ்டாலின் அழைப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 21ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்தை திமுக நடத்துகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்த அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகள் சேவை மற்றும் விலை நிர்ணயச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த சட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் விவசாயச் சங்கங்கள் போராட்டம் அறிவித்துள்ளன. இந்த சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் உதவும் என்றும், மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோகும் என்றும் கூறி, எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சியான அதிமுக இந்த சட்டத்தை ஆதரித்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கும் என்றும் கூறி வருகிறது. அதே சமயம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
இந்நிலையில், இந்த புதிய வேளாண்மைச் சட்டங்களில் ஏற்படும் பாதகங்கள் குறித்து விவாதிக்க வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக நடத்துகிறது. இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகளுக்கு விரோதமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.