திருவனந்தபுரம் தங்க கடத்தல் அமீரக தூதரக அதிகாரிகளிடம் விசாரிக்க முடிவு
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமீரக தூதரக அதிகாரிகளிடம் விசாரிக்க என்ஐஏ தீர்மானித்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஸ்வப்னாவுக்கும், கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவர் தூதரக பார்சலில் மத நூல்கள் கொண்டு வந்தது தெரியவந்தது.
இந்த மத நூல்கள் வந்த பார்சலில் தங்கமும் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமலாக்கத்துறை மற்றும் என்ஐஏ விசாரணை நடத்தியது.இந்நிலையில் நேற்று கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பது: அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் தூதரக உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகளுக்குத் தெரியாமல் அந்த பார்சலில் எதையும் கடத்த முடியாது. இந்த சம்பவத்தில் பெரும் சதி நடந்துள்ளது.
தங்கத்தை இந்தியாவுக்குக் கடத்துவதின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க இவர்கள் முயற்சித்துள்ளனர்.இந்த தங்கக் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தைத் தீவிரவாத செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி இருப்பதாகச் சந்தேகம் உள்ளது. எனவே இது தொடர்பாகத் தூதரக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் தொடர்புடைய சிலர் துபாயில் இருப்பதால் அங்குச் சென்று விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கக் கடத்தலில் அமீரக தூதரக உயரதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக என்ஐஏ குற்றம்சாட்டியுள்ளது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையே உள்ள உறவில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. தூதரக உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.