திருடன் திருப்பிக் கொடுத்த பணத்தை கடை உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா?
பாலக்காடு அருகே திருடன் திருப்பிக் கொடுத்த பணத்தைத் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை அப்பகுதியைச் சேர்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரின் சிகிச்சை செலவுக்காகக் கொடுத்தார் கடை உரிமையாளர் உமர்.பாலக்காடு அருகே அலநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உமர் (47). இவர் அப்பகுதியில் ஒரு பல்பொருள் அங்காடி வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் உமர் காலையில் கடையைத் திறக்க வந்தபோது கடை வாசலில் ஒரு சிறிய பார்சல் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்த போது அதனுள் 5,000 ரூபாயும் ஒரு கடிதமும் இருந்தது.
அந்த கடிதத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன் கடையில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி சில பொருட்களைத் திருடிச் சென்றதாகவும், ஆனால் அது தவறு எனத் தெரிந்ததால் அதற்கான பணத்தை அந்த பார்சலில் வைத்திருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.அப்போது தான் உமருக்குக் கடந்த 6 மாதங்களுக்கு முன் கடையில் சாக்லேட், ஜூஸ் உட்பட சில உணவுப் பொருட்கள் திருடப்பட்டது நினைவுக்கு வந்தது.
போலீசில் புகார் செய்த போதிலும் கடையில் திருட்டுப் போன சம்பவத்தையே உமர் மறந்து விட்டிருந்தார். இந்நிலையில் திருடன் மனம் திருந்தி பணத்தைத் திரும்பக் கொடுத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த பணத்தை எடுத்துக் கொள்ள அவருக்கு மனம் வரவில்லை. திருடன் திருப்பித் தந்த அந்த பணத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு உமர் கொடுத்து விட்டார். விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நபரின் சிகிச்சைக்காக போதிய பணம் இல்லை என்று தெரிந்ததால் அந்த பணத்தை அவருக்கே கொடுத்து விட்டார் உமர்.