சவுதியில் விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுக்கும் பரிதாபம்

சவுதியில் பணி விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகவும், சிலர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் பணி விசா முடிந்த பின்னரும் அங்கேயே தொடர்ந்து வருகின்றனர். சவுதி அரேபிய சட்டப்படி பணி விசா முடிந்தால் உடனடியாக நாடு திரும்பி விட வேண்டும். சிலர் விசா காலாவதி முடிந்தாலும் வேறு வேலையில் சேர முயற்சிப்பது உண்டு. அப்படி வேலை கிடைத்தவர்கள் விசாவை புதுப்பித்து அங்கேயே தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சவுதியில் பணி விசா முடிந்த பின்னர் வேறு வேலை கிடைக்காததால் 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 50க்கும் மேற்பட்டோரைச் சவுதி போலீசார் பிடித்து தடுப்புக்காவல் மையத்தில் அடைத்துள்ளனர். இவ்வாறு அடைக்கப்பட்டவர்களில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 பேரும், பீகாரைச் சேர்ந்த 10 பேரும், தெலங்கானாவை சேர்ந்த 5 பேரும் மற்றும் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 4 பேரும், ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பிச்சை எடுப்பவர்களில் தெலங்கானா, ஆந்திரா, உத்திர பிரதேசம், காஷ்மீர், பீகார், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இதுகுறித்து சவுதியிலுள்ள எம்பிடி என்ற அமைப்பின் தலைவரான அம்ஜத்துல்லா கான் என்பவர் கூறுகையில், சவுதியில் 450 இந்தியர்கள் அனுபவிக்கும் துன்பம் குறித்தும், அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் சவுதியிலுள்ள இந்தியத் தூதர் அவுசப் செய்யாது ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

More News >>