எலும்பை உறுதி செய்யும், இதயத்திற்கு இதம் தரும், கொலஸ்ட்ரால் குறைக்கும் - தினையின் மருத்துவ பலன்கள்
ஆரோக்கியமான உணவு' என்பது பரவலாக பேசுபொருளாகி இருக்கிறது. யாராவது எதையாவது ஆரோக்கியம் என்று கூறிவிட்டால் போதும்; உடனே அதை வாங்கிவிட வேண்டும் என்ற தூண்டுதல் அநேகருக்கு எழுந்துவிடுகிறது. மேற்கத்திய உணவு பொருள்கள் பலவற்றை நாம் ஆரோக்கியம் என்று கருதி, அதிக சிரமப்பட்டு வாங்குகிறோம். அது, 'கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை'தான். நம் இடத்திலேயே பயிராகும் சிறுதானியங்களில் பல சத்துகள் உள்ளன. அவற்றுள் ஒன்று தினை.
தினையரிசி, சிறுதானிய வகைகளுள் ஒன்று. உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் இரண்டாவது தானியம் இதுதான். கோதுமை மற்றும் அரிசியை ஒப்பிடும் போதுநார்ச்சத்து அதிகமாக கொண்டுள்ளது. தினையில் புரத சத்து நிறைந்துள்ளது.இவை தவிர தாதுக்களான இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது.
நரம்புக்கு நலம்
சிறுவர் முதல் பெரியவர் வரைக்கும் ஏதேதோ நரம்பு பிரச்னைகள் வரும் காலகட்டத்தில் வாழ்கிறோம். வலிப்பு, உடல் எங்கும் குத்துவது போன்ற உணர்வு, இரவுப்பொழுதில் பாதங்களில் எரிச்சல், எட்டுமாதங்களாகியும் தலை சுமக்க இயலாத குழந்தை இவையெல்லாம் பொதுவான நரம்பு பிரச்னைகள். நரம்பு ஆரோக்கியத்தில் மூளைக்கு முக்கிய இடம் உண்டு. முதுமையில் வரும் அல்சைமர் என்னும் நினைவு குழப்பம், பார்கின்ஸ் என்னும் கை, கால் உதறல் போன்றவை தீவிர நரம்பு பிரச்னைகளாகும்.
தினை அதிகமாக சாப்பிட்டால் நரம்பு பாதிப்பினை தடுக்கலாம். அல்சைமர் பாதிப்பு உள்ளவர்களுக்கு வைட்டமின் பி1 துணை உணவுகள் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 100 கிராம் சமைத்த தினையில் 0.59 மில்லி கிராம் வைட்டமின் பி1 உண்டு. அல்சைமர் பாதிப்பு தீவிரமடையாமல் இது தடுக்கும். கூர்மையான கவனம் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றுக்கும் தினை அவசியம். இதைக் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை செய்வது இரும்புச் சத்து. அது மூளைக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. போதுமான அளவு இரத்தம் மூளைக்குக் கிடைத்தால் அல்சைமர் மற்றும் டிமென்சியா போன்ற முதுமையில் வரும் நினைவு தொடர்பான குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். நரம்பு மண்டலம் நன்றாக வேலை செய்வதற்கு புரதம் உதவுகிறது. இரும்புச் சத்து, புரதச் சத்து ஆகியவை தினையில் அதிகம் உள்ளன.
எலும்பு - இரும்பென உறுதி
இரும்புச் சத்தைப் போன்றே கால்சியமும் (சுண்ணாம்புச் சத்து) தினையில் அதிகம் காணப்படுகிறது. தசையின் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து அத்தியாவசியம். இரும்புச் சத்து குறைபட்டால் தசை, நெகிழ்வுதன்மையை இழக்கும்; இரத்தசோகையும் ஏற்படலாம். எலும்பு உறுதியாக இருப்பதற்கு கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அவசியம். முடக்குவாதம் உள்ளிட்ட எலும்பு பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தினையை அதிகம் சாப்பிடவேண்டும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதற்கு முளைகட்டிய தினை சாப்பிடலாம்.
இதயத்திற்கு இதம்
தசைக்கும் நரம்புக்கும் இடையே தகவலை கடத்தும் அஸிடைகொலைனின் உற்பத்திக்கு வைட்டமின் பி1 உதவுகிறது. ஆகவே, இதயத்தின் செயல்பாடு பாதுகாக்கப்படுகிறது. வைட்டமின் பி1 குறைந்தால் இதயத்தின் செயல்பாடு முறையாக அமையாது. வைட்டமின் பி1, தினையில் அதிகம் காணப்படுவதால் இதய ஆரோக்கியத்தை நாடுவோர் இதை சாப்பிடலாம்.
கிளைசெமிக் குறியீடு
குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு பொருள்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும். தினையின் கிளைசெமிக் குறியீடு (50.8) இரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுவோர், தினையில் தோசை, பிஸ்கட், இனிப்புகள் செய்து சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால்
லெசித்தின் மற்றும் மெதியோனைன் போன்ற அமினோ அமிலங்கள், ஈரலிலிருந்து அதிகப்படியான கொழுப்பினை வெளியேற்றி, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றன. இந்த அமினோ அமிலங்கள் தினையில் உள்ளன. ஈரலில் கொழுப்பு உருவாகிறதை தடுக்கக்கூடிய திரியோனைன் என்ற அமினோ அமிலமும் தினையில் உள்ளது.
இவை தவிர, செரிமானத்திற்கு உதவுதல், உடல் எடையை குறைத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தல் ஆகிய நன்மைகளையும் தினை செய்கிறது.