45 வயது பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோவை சமூக இணையதளங்களில் பரப்பிய 3 பேர் கைது
ராஜஸ்தானில் அண்ணன் மகனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த 45 வயது பெண்ணை தடுத்து நிறுத்தி 6 பேர் பலாத்காரம் செய்து அந்த காட்சியை சமூக இணைய தளங்களில் பரப்பிய சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 14ம் தேதி தான் இந்த கொடூர சம்பவம் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே உள்ள திசாரா என்ற இடத்தை சேர்ந்த 45 வயதான பெண் தனது அண்ணன் மகனுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவர்களை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கடத்தி சென்றது. பின்னர் அந்த கும்பல் அவரை பலாத்காரம் செய்தது. அதை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதன் பின்னர் வீடு திரும்பிய அந்தப் பெண் இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில் அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ் அப் உள்பட சமூக இணைய தளங்களில் பரவியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதன் பிறகு தான் அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருவதாக ஆல்வார் போலீசார் தெரிவித்தனர்.