இந்தி திணிப்புக்கு எதிராக பாஜக ஆதரவு எம்பி!
நாடு முழுவதும் பள்ளிகளில் மும்மொழியை கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற முடிவை எடுத்து, அதற்கான வரைவு அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போராட்டம் வெடிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழியோ, இந்தித் திணிப்பை தமிழகத்தில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்ல கர்நாடகாவிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, இந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துள்ளார். இதற்கிடையே, பாஜக ஆதரவு பெற்ற எம்பி சுமலதா அம்பரீஷ் மத்திய அரசின் நடவடிக்கையை திடீரென எதிர்த்து பேசியுள்ளார். ``பிராந்திய மொழிகளை வீழ்த்தும் வேலையே மத்திய அரசின் இந்தி திணிப்பு. நாடு முழுவதும் மக்கள் கன்னட மொழியையும் பேசுகிறார்கள். கன்னட மொழிக்கு பாரம்பரியமான வளமான மொழி" எனப் பேசியுள்ளார். பாஜக ஆதரவில் ஜெயித்த சுமலதா, இப்போது பாஜக அரசின் திட்டங்களை சாடி பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.