8 நாளில் கேரளா போலீஸ் செலவழித்தது 23 லட்சம் லிட்டர் தண்ணீர் எதற்கு தெரியுமா?

கேரளா முழுவதும் கடந்த 8 நாட்களாக போராட்டக்காரர்களை விரட்டி அடிப்பதற்காக கேரள போலீஸ் 23.04 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியுள்ளது.கேரளாவில் போராட்டங்களுக்கு எப்போதுமே பஞ்சம் ஏற்பட்டது கிடையாது. அங்கு எதற்கெடுத்தாலும் போராட்டம் தான். திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் குடில்கள் கட்டிக் கூட போராட்டம் நடத்துவது உண்டு. தலைமைச் செயலகம் திறந்திருந்தால் அன்று போராட்டம் நடைபெறுவது உறுதி என கூறிவிடலாம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்க கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறி கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி கேரளா முழுவதும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ், பாஜக, முஸ்லிம்லீக் உட்பட எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களில் ஈடுபடுபவர்களை விரட்டியடிக்க கேரள போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வருண் என்ற வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இந்த வாகனத்தின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு 'கன் பைப்புகள்' மூலம் ஒரு நிமிடத்தில் 2000 முதல் 10,000 லிட்டர் வரை தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியும். 150 மீட்டர் தொலைவில் இருப்பவர்களை கூட இதன்மூலம் விரட்டியடிக்கவும், வீழ்த்தவும் முடியும்.

கேரள போலீசுக்கு மொத்தம் இதுபோன்ற 12 தண்ணீர் வாகனங்கள் உள்ளன. கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஆபத்துகளும் ஏற்படுவதுண்டு. கண்ணிலோ, காதுகளிலோ தண்ணீர் பாய்ந்தால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. அதனால் தான் இந்த வாகனம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கத் தொடங்கியதும் போராட்டக்காரர்கள் அலறியடித்து ஓடுகின்றனர். ஆனாலும் சிலர் அதன் முன் நின்று கொண்டு தாக்குப் பிடிப்பதும் உண்டு.

More News >>