லோன் தருகிறேன் என்று போன் செய்த காயத்ரி, என்ன செய்தார் தெரியுமா?
கடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். கண்டுபிடிக்கப்படாமல் இருக்க அக்கும்பல் நூதன வழிகளை கையாண்டது தெரிய வந்துள்ளது.
சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கு பெண் ஒருவர் போன் செய்து, 2 லட்சம் ரூபாய் கடன் தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சில் மயங்கிய கருப்பையா, கடன் வாங்க ஒத்துக்கொண்டுள்ளார். அப்பெண் கேட்டபடி தன் வங்கிக் கணக்கு விவரங்களை கூறியவர், தன் கணக்கிலிருந்த ரூ.20,000/- எடுக்கப்பட்டதை அறிந்து பதறிப்போனார். அவர் காவல்துறையில் புகார் செய்ததையடுத்து சைபர் கிரைம் போலீசார் இதை விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் நாமக்கலில் ஃபெதர்லைட் டெக் என்ற பெயரில் இயங்கி வந்த போலி கால் சென்டர் இம்மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. காயத்ரி (வயது 20), ரஞ்சிதா (வயது 25), சுபத்ரா (வயது 21) உள்ளிட்ட ஒன்பது இளம் பெண்கள் இங்கு பணியமர்த்தப்பட்டிருந்தனர். குமரேசன் என்பவர் இம்மோசடிக்கு மூளையாக இருந்துள்ளார்.
கடனுதவி தருவதாக கூறி ஒப்புக்கொள்ள வைத்ததும், வங்கிக் கணக்கு விவரங்களை வாங்கி, அதைக்கொண்டு அதேபோன்று இன்னொரு கணக்கை மோசடி கும்பல் தொடங்கும். பின்பு, விவரங்களை தந்தவரின் கணக்கிலிருந்து இப்புதிய கணக்குக்கு பணத்தை மாற்றிக்கொள்ளும். எனவே, பணத்தை யார் மாற்றியது என்ற விவரத்தை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளது.
சில நேரம், ஏமாறுகிறவர்களின் பணத்தை ஆன்லைன் கேம் விளையாடவும் இக்கும்பல் பயன்படுத்தியுள்ளது. கேம் செயலிக்கு பணத்தை மாற்றி, மோசடியாளரின் கணக்கை மறைத்து, ஒரு கேமை விளையாடிய பிறகு மீதி பணத்தை திரும்ப தங்கள் கணக்குக்கு மாற்றியும் இவர்கள் நூதன வழியில் செயல்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் மோசடியில் ஈடுபட்டவர், உதவி செய்தவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர்.