துணி மாஸ்க் கொரோனா கிருமியை தடுக்குமா? அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
கொரோனா பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. முக கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவுதல், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவு பொருள்களை சாப்பிடுதல் ஆகியவற்றை கோவிட்-19 கிருமி தாக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக கடைபிடிக்கிறோம்.
மாஸ்க் எனப்படும் முககவசத்தை பொறுத்தமட்டில் பல்வேறு பொருள்களில் செய்தவை பயன்படுத்தப்படுகின்றன. என்95 மற்றும் மருத்துவ முக கவசம் போன்றவற்றையும் பல்வேறு துணிகளில் செய்யப்பட்ட முக கவசங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர். துணிகளில் செய்யப்பட்ட முக கவசங்களால் பயனில்லை என்று ஒரு சாரார் வலியுறுத்தி வந்தனர்.
எக்ஸ்டீரிம் மெக்கானிக்ஸ் லெட்டர்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவில் பேசும்போதும், இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகளை தடுப்பதில் ஓரடுக்கு துணி மாஸ்குகள் நல்ல பலன் தருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட துணி, போர்வைகள் போன்றவற்றிலிருந்து செய்யப்படும் முக கவசங்கள் போதுமானது என்றும் இக்குறிப்பு தெரிவிக்கிறது.
வாய் மற்றும் மூக்கிலிருந்து தெறிக்கும் துளிகள் ஐந்து மைக்ரோமீட்டர்களுக்கு குறைவான அளவிலிருந்து, நூறுக்கணக்கான நானோமீட்டர் அளவு வரை வகைப்படுத்தப்படுகின்றன. பெரிய துளிகள் ஒரு மில்லிமீட்டர் விட்டம் வரை கொண்டிருக்கும். அதிக வேகத்தில் இவை வெளியேறும்போது சில வகை துணிகள் வழியே சிறுசிறு துளிகளாக சிதறி வெளிப்படக்கூடிய பிரச்னையும் உள்ளது.
ஆனால் கட்டாயமாக முக கவசம் அணியும்போது அது சுவாசிக்க ஏற்றதாகவும் அமையவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மருத்துவ முக கவசத்தை அளவீடாக கொண்டு, வீட்டில் பயன்படுத்தும் 11 வகை துணிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். வடிவமைப்பு, பயன்படுத்தப்பட்ட துணியில் அடங்கியுள்ள பொருள்கள், எடை, நூல்களின் எண்ணிக்கை மற்றும் நீரை உறிஞ்சும் தன்மை இவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.
துணியினால் செய்யப்பட்ட முககவசங்கள் கோவிட்-19 பரவலை தடுக்க உதவும் என்றும், ஓரடுக்கு துணியே போதுமானது; இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் கொண்ட முககவசங்கள் அதிக பாதுகாப்பானவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.