30 வருட காவல் பணி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விராட் ஓய்வு பெற்றது

30 வருட காலம் இந்திய கடற்படையின் ஒரு அங்கமாக இருந்த மிகப்பழமையான ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் ஓய்வு பெற்றது.

1959ல் பிரிட்டிஷ் ராயல் கடற்படைக்காக உருவாக்கப்பட்ட எச் எம் எஸ் ஹெர்மிஸ் என்ற போர்க்கப்பலை 1987ல் இந்திய வாங்கி அதற்கு ஐஎன்எஸ் விராட் என பெயர் சூட்டப்பட்டு இந்திய கடற்படையுடன் சேர்க்கப்பட்டது. இதன் பிறகு கடந்த 30 வருடங்களாக இந்த போர்க்கப்பல் நமது இந்திய கடற்படையுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. இது இந்தியாவின் இரண்டாவது போர்க்கப்பல் ஆகும். ராயல் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்த இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்த கப்பலில் பணிபுரிந்துள்ளார். 28,000 டன் எடையுள்ள இந்த விராட் போர்க்கப்பல் உலகிலேயே மிகவும் பழமையான விமானந்தாங்கி கப்பல் ஆகும்.பழமை அடைந்ததால் இந்த கப்பலுக்கு பராமரிப்புச் செலவு அதிகரித்தது. இதையடுத்து இந்த போர்க் கப்பலை டி கமிஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த 2017ம் ஆண்டு இந்த கப்பலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இதன் பிறகு இந்த போர்க்கப்பல் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொங்கனில் உள்ள சிந்துதுர்கில் ₹852 கோடி செலவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த கடல்சார் அருங்காட்சியகத்தில் இந்த கப்பலை வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து ஐஎன்எஸ் விராட்டை உடைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று இந்த கப்பல் மும்பையிலிருந்து குஜராத்தில் உள்ள அலங்க் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி மும்பை கடற்படை சார்பில் இந்த கப்பலுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. அப்போது பல கடற்படை அதிகாரிகள் கண்ணீர் விட்டனர். ஸ்ரீராம் குரூப் என்ற நிறுவனம்தான் இந்த கப்பலை உடைக்கும் கான்ட்ராக்டை ஏலத்தில் எடுத்துள்ளது.

More News >>