மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து 8 பேர் பலி, 20 பேர் மீட்பு.
மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. உடனடியாக, அக்கம்பக்கம் இருந்த மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். மேலும், 8 சடலங்களையும் எடுத்தனர். விபத்து குறித்துத் தானே நகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், இது வரை 20 பேரை உயிருடன் மீட்டுள்ளோம். ஒரு குழந்தை உள்பட 8 பேர் பலியாகி விட்டனர். அவர்களின் சடலங்களை எடுத்திருக்கிறோம். கட்டிடம் இடிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.