கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி பம்பர் கிடைத்தது யாருக்கு தெரியுமா?
கேரள அரசு லாட்டரியில் ₹12 கோடி முதல் பரிசு எர்ணாகுளத்தைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவருக்குக் கிடைத்துள்ளது.கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ₹12 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட்டின் விலை ₹300 ஆகும். டிக்கெட் விலை சற்று அதிகமாக இருந்ததால் அவ்வளவாக டிக்கெட் விற்பனை ஆகாது என்றே கருதப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட 2.1 லட்சம் டிக்கெட்டுகள் அதிகமாக விற்பனையானது. மொத்தம் 44 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகின. இம்முறை டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் கேரள அரசுக்கு ₹22 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டிபி 173964 என்ற எண்ணுக்கு முதல் பரிசான ₹12 கோடி கிடைத்தது. இந்த டிக்கெட் எர்ணாகுளத்தில் விற்பனையானது தெரியவந்தது. பரிசு விவரம் வெளியான அன்று அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இதையடுத்து அந்த அதிர்ஷ்டசாலியைப் பலரும் தேடிவந்தனர். இந்நிலையில் அந்த அதிர்ஷ்டசாலி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் பணி புரியும் அனந்து விஜயன் (24) எனத் தெரியவந்தது.
இவரது சொந்த ஊர் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள இரட்டையர் ஆகும். இவரது தந்தை விஜயன் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். தந்தையைப் பார்த்துத் தான் அனந்துவுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அனந்து கூறுகையில், பல வருடங்களாகவே லாட்டரி டிக்கெட் எடுத்து வருகிறேன். எனது தந்தையும் ஓணம் பம்பர் லாட்டரி எடுத்தார். ஆனால் எனக்குத் தான் அதிர்ஷ்டம் அடித்தது. பரிசு விவரம் தெரிந்த நேற்று காலையில் கூட எனக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும் என எனது நண்பர்களிடம் நான் விளையாட்டாகக் கூறினேன். அது இப்போது இப்போது உண்மையாகி விட்டது என்றார்.