நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாவை தொடர்ந்து மற்றொரு நடிகைக்கு கொரோனா தொற்று..
கொரோனா தொற்று சினிமா நட்சத்திரங்களை பதம் பார்த்து வருகிறது. நல்ல வேளையாக அவர்கள் உடனுக்குடன் தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர். நடிகர்கள் விஷால், கருணாஸ், நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜூன், நிக்கி கல்ராணி, டைரக்டர் ராஜமவுலி எனப் பலர் தொற்றிலிருந்து குணம் அடைந்தனர். பாலிவுட்டிலும் அமிதாப்பச்சன் குடும்பமே தொற்றுக்குள்ளாகி மீண்டது.
நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் என சினிமா நட்சத்திரங்களைத் தொடர்ந்து தற்போது சின்னத்திரை நடிகை ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனை கிளி சீரியலில் நடித்து வருபவர் மோனிஷா. இவர் தனக்கென பெண்கள் மத்தியில் ரசிகர் வட்டத்தைப் பிடித்து வைத்திருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு படம் வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா தொற்று பாசிடிவ் ஆனது பற்றித் தெரிவித்திருப்பதுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் தங்களுக்குத் தொற்று குணம் ஆனபிறகு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்ட நிலையில் டைரக்டர் ராஜமவுலி, தொற்றிலிருந்து மீண்ட இசை அமைப்பாளர் கீரவாணி இருவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்திருக்கின்றனர். இவர்களில் கீரவாணி சமீபத்தில் பிளாஷ்மா தானம் செய்தார். இதன் மூலம் கொரோனா தொற்றில் பாதித்திருப்பவர்களுக்கு பிளாஷ்மா சிகிச்சை அளித்து அவர்களை எளிதில் குணமாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.