கொரோனா கொடுமை 4 மாதத்தில் பறிபோனது 66 லட்சம் ஒயிட் காலர் ஜாப்

கொரோனா காரணமாகக் கடந்த 4 மாதத்தில் ஒயிட் கலர் வேலையில் இருந்த 66 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோய் விட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவடையவில்லை. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஏராளமான தொழில்கள் நலிந்து விட்டன. தினசரி கூலித் தொழிலாளர்கள் படும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. உலகம் முழுவதிலும் அனைத்து துறைகளிலும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைத்து விட்டன.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியருக்கான பல சலுகைகளை மத்திய அரசும், மாநில அரசும் ரத்து செய்துள்ளன. அதுமட்டுமில்லாமல் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கான சம்பளமும் குறைக்கப்பட்டு விட்டது. ஏற்கனவே எம்பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சிஎம்ஐஇ கன்ஸ்யூமர் பிரமிட் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தெரியவந்த விவரங்கள் வருமாறு: சாதாரணமாக அமைப்புசாரா தொழில்துறையில் தான் வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் தற்போது இந்தியாவில் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் அமைப்பு சார்ந்த தொழிலுக்கும் வந்துவிட்டது. சாப்ட்வேர், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், அக்கவுண்டன்டுகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோர் தான் இப்போது கடும் பிரச்சனையைச் சந்திக்கின்றனர்.

இதுபோன்ற ஒயிட் காலர் வேலையில் இருந்த 66 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இப்போது வேலை பறிபோய் விட்டது.ஒயிட் காலர் ஜாப் என்றால் மிகவும் பாதுகாப்பான வேலை என்று தான் இதுவரை அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இதிலும் எந்த பாதுகாப்பும் இல்லை என இப்போது தெரியவந்திருக்கிறது. இவ்வாறு வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் வங்கிகளில் ஏகப்பட்ட கடன்களை வாங்கி வைத்துள்ளனர். கடந்த 6 மாதமாக மொரட்டோரியம் அமலில் இருந்ததால் இஎம்ஐ கட்டாமல் இவர்கள் தாக்குப்பிடித்து வந்தனர். ஆனால் இந்த மாதம் முதல் மீண்டும் இஎம்ஐ கட்ட வேண்டும். கடந்த 4 மாதத்தில் ஒயிட் காலர் ஜாப் எண்ணிக்கை 18.8 லட்சத்தில் இருந்து 12.2 லட்சமாகக் குறைந்துவிட்டது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>