சின்(னய்யா)ராசை கையிலேயே புடிக்க முடியாது | அன்புமணி ராமதாஸ் MP எங்கே ?
நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றியது. அதனை தொடர்ந்து எதிர்கட்சிகளின் எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க, மத்திய உணவு பதப்படுத்துதல் துறையின் இணையமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பதவிவிலகி தன் எதிர்ப்பை பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் மசோதாக்களை எதிர்க்க, பாராளுமன்றத்தில் தேனி எம்.பி. ரவீந்த்ரநாத் அவர்கள் ஆதரவு தெரிவித்து கட்சியின் தற்போதைய நிலையை நாட்டுக்கே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ராஜ்ய சபா எம்.பி யான திருச்சி சிவா மசோதா புத்தகத்தை கிழித்து எறிந்து தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.
இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் ராஜ்ய சபா MP அன்புமணி ராமதாஸ் அவர்களை தேடினால், அவர் சபைக்கே வரவில்லை.
மாற்றம், முன்னேற்றம், அன்புமணி என டாக்டர் படித்து இருக்கும் பிம்பத்தை வைத்துக் கொண்டு முதல்வர் வேட்பாளர் கனவு காண்பது எளிது. ஆனால் அதற்கான மக்கள் பணி என்பது அளவுகடந்த தியாக மனப்பான்மையோடு செய்ய வேண்டிய ஒன்று. விவசாயிகள் அதிகம் வாழும் தொகுதியிலிருந்து ராஜ்ய சபா சென்ற ஒரு உறுப்பினர், விவசாயிகளின் துறை சார்ந்த மசோதாக்களின் நிறைவேற்றுதல் நாளிற்கு வராமல் இருப்பது, அரசியலில் இன்னமும் சரியான பிடிமானத்திற்கு வராத அன்புமணி அவர்களின் நிலையை வெளிக்காட்டுகிறது. பாஜகவோடு கூட்டணி, சாதிய மோதல்களுக்கு அச்சாணி என ஏற்கனெவே எக்கசக்க புகார்கள் பாமகவின் மீது இருக்க, மசோதாக்களின் மீதான தங்களது நிலையை மத்திய அரசின் ஆதரவில் இருக்கும் கட்சியின் எம்.பி பதிவு செய்யாது போனது, அவர் சார்ந்து இருக்கும் மக்களுக்கு அவர் இழைக்கும் மிகப்பெரும் அநீதி. தைலாபுர தோட்டத்திலேயே தனது அரசியல் நகர்வுகளை முடித்துவிடலாம் என எண்ணுகிறாரா டாக்டர். அன்புமணி ராமதாஸ் அவர்கள் ?
குறைவான வருகையை பதிவு செய்து இருக்கும் அன்புமணி அவர்களுக்கு தேசிய அரசியலில் பங்கு வகிக்கும் முக்கியத்துவம் கண்டிப்பாக தெரிந்து இருக்ககூடும். ஏற்கனெவே மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார் என்பது ஊரறிந்த விடயம். இருப்பினும் சபைக்கு வராமல் இருப்பது ஏன் ?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அரசியல் முகத்தை திடப்படுத்தி இந்திரா காந்தியையே மலைக்க வைத்தது ராஜ்ய சபையில் தான். எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்து, இன்று ஆளுங்கட்சியாக திகழும் அதிமுக முதல் காலடியை எடுத்து வைத்தது பாராளுமன்றத்தில் தான். இன்றளவும் பல்வேறு சறுக்கல்களுக்கு பின்பும் வைகோ அவர்கள் அரசியல் களத்தில் தனித்து தெரிவதற்கு காரணம், தனக்கு அளிக்கப்பட்ட ராஜ்ய சபா மற்றும் லோக் சபா எம்.பி பதவிகளை சரிவர பயன்படுத்தி, நாட்டின் முக்கியமான விவாதங்களை தன் கேள்விகளால் செழுமைபடுத்தி One of the Best Parliamentarian எனும் வாக்கியத்திற்கு சொந்தக்காரர் எனும் பெயர் பெற்றது தான். ராஜ்ய சபா எம்.பி பதவியை தோல்வி பெற்ற பிறகு அடைந்ததால் அதை புறக்கணிக்கிறாரா அன்புமணி போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் கசிய ஆரம்பித்துவிட்டன.
மெளனங்கள் பெரும் சாம்ராஜ்யங்களை தரைமட்டமாக்கும்....
பதில்கள் டாக்டர்.அன்புமணி அவர்களிடம் தான் உள்ளது