கொரோனாவை கண்ணாடி தடுக்குமா? ஆய்வில் தகவல்
மூக்கு கண்ணாடி அணிபவர்களுக்கு கொரோனா பாதிப்பு சற்று குறைவு என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.கடந்த பல மாதங்களாக உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்பட்ட பீதி இன்னும் குறையவில்லை. முக கவசம் அணிவது, அடிக்கடி சானிடைசர், சோப் பயன்படுத்தி கைகளை கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மட்டுமே தற்போதைக்கு இந்த நோயை ஓரளவு தடுக்க முடியும்.ஆனால் இது மட்டுமில்லாமல் மூக்கு கண்ணாடி அணிந்தால் கூட கொரோனாவை சற்று தடுக்க முடியும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. கண்கள் மூலமாகவும் கொரோனா எளிதில் பரவும். கைகளில் கொரோனா வைரஸ் இருந்தால் கண்களைத் தொடும் போது மிக எளிதில் பரவ வாய்ப்பு உண்டு. கண்ணாடி அணிந்திருந்தால் பெரும்பாலும் யாரும் அதிகமாக கண்களை தொடமாட்டார்கள்.
சாதாரணமாக ஒருவர் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 10 தடவையாவது கண்களை தொட வாய்ப்பு உண்டு. கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் செல்லாமல் இருக்க வாயையும், மூக்கையும் மட்டும் மூடினால் போதாது, கண்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.சீனாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் 276 நோயாளிகள் கலந்துகொண்டனர். இதில் கண்ணாடி வைத்தவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு 5.8 சதவீதமாகவும், கண்ணாடி இல்லாதவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு 31.5 சதவீதமாகவும் இருப்பது தெரியவந்தது. எப்போதும் கண்ணாடி வைப்பவர்களை கொரோனா வைரஸ் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.