இறப்பு சான்றிதழ் கிடைத்ததும் சசிகலாவிற்கு பரோல்..
மறைந்த நடராஜனின் இறப்பு சான்றிதழ் கிடைத்ததும், சசிகலாவிற்கு பரோல் வழங்கப்படும் என பெங்களூரு சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், சில மணி நேரங்களில் சசிகலா பரோலில் வருவார் என கூறப்படுகிறது.
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 17ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் தொற்று காரணமாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சசிகலாவிற்கு பரோல் வழங்கப்பட்டதால் மீண்டும் பரோல் வழங்க முடியாது என்றும், நெருங்கிய உறவினர்கள் இறந்தால் மட்டுமே பரோல் வழங்க முடியும் என்றும் சிறை நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது.
இந்நிலையில், நடராஜன் இறந்ததை அடுத்த சசிகலா சார்பில் 15 நாட்களுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து, நடராஜனின் இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் சசிகலாவிற்கு பரோல் வழங்கப்படும் என்று சிறை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை நாட்களுக்கு பரோல் வழங்கப்படும் என்பது குறித்து தகவல் வெளிவரவில்லை.
இதையடுத்து, சசிகலா இன்னும் சில மணி நேரங்களில் பரோல் கிடைத்து தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்வதற்காக தமிழகம் வருவார் என்று கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com