கேரளாவில் மீண்டும் என்ஐஏ அதிரடி மேலும் 2 தீவிரவாதிகள் கைது
கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளாவில் 3 அல் கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்ட நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மேலும் 2 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது.கடந்த இரு தினங்களுக்கு முன் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மேற்குவங்க மாநிலம், கேரளா உள்பட 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் இருந்து அல் கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த 6 தீவிரவாதிகளும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் வைத்து 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 9 பேரும் டெல்லி, கொச்சி கடற்படை தளம் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்காக நிதி சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 9 பேரையும் நேற்று என்ஐஏ அதிகாரிகள் டெல்லி கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தியாவில் குறிப்பாகக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்படத் தென் தென்மாநிலங்களில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் இருப்பதாக ஏற்கனவே ஐநா, இந்தியாவை எச்சரித்திருந்தது. இதன்படி நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் இருந்து 120க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான அல் கொய்தா தீவிரவாதிகள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கடந்த 2014ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த சுகைப் என்பவரை என்ஐஏ தேடிவந்தது. இதேபோல டெல்லிக் குண்டு வெடிப்பு வழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குல்நவாஸ் என்பவரையும் என்ஐஏ தேடிவந்தது. இவர்கள் இருவரும் ரியாத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து இன்டர்போல் உதவியுடன் அவர்களைக் கைது செய்ய என்ஐஏ நடவடிக்கை எடுத்தது.
இதன்படி கடந்த இரு வாரங்களுக்கு முன் டெல்லியில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் ரியாத் சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இருவரையும் நேற்றிரவு என்ஐஏ அதிகாரிகள் திருவனந்தபுரம் கொண்டு வந்தனர். திருவனந்தபுரத்தில் இருவரிடம் என்ஐஏ தவிர மத்திய உளவு அமைப்பான 'ரா' மற்றும் ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்பிறகு இருவரும் கொச்சி கொண்டு செல்லப்பட்டனர். கொச்சியில் இருந்து இவர்கள் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகின்றனர்.