எதிர்ப்புகளை மீறி தமிழகம் வந்தது ராம ராஜ்ஜிய ரத யாத்திரை
பல்வேறு கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு இன்று பலத்த பாதுகாப்புடன் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்தடைந்தது.
ராமர் கோவில் கட்டுதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய யாத்தியை நடத்தப்படுகிறது. கேரளாவில் இருந்து புறப்பட்ட இந்த யாத்திரை தமிழகத்திற்கு வரும் என கூறப்பட்டது. இதனால், யாத்திரை தமிழகம் வருவதற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராம ராஜ்ஜிய ரத யாத்திரை இன்று காலை தமிழக எல்லையான நெல்லை மாவட்டம், கோட்டைவாசல் பகுதிக்கு வந்தடைந்தது. பின்னர், இங்கிருந்து புளியரை நோக்கி புறப்பட்டது.
இதற்கிடையே, ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருமாவளவன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com