எந்த நாட்டுடனும் போர் புரிய மாட்டோம்.. சீன அதிபர் ஜின்பிங் பேச்சு..
எந்த நாட்டுடனும் போர் புரியும் நோக்கம் சீனாவுக்கு இல்லை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. இதனால், கடந்த 5 மாதங்களாக மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும், சுமுக முடிவு ஏற்படாமல் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் 75-வது ஆண்டு தினத்தை ஒட்டி காணொலி வாயிலாகச் சிறப்பு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றைய(செப்.22) கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:உலகில் மிகப்பெரிய வளரும் நாடாகச் சீனா உள்ளது. அமைதி, வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் அனைவருக்குமான வளர்ச்சிப் பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது.எந்த நாட்டுடனும் போர் புரிய வேண்டுமென்ற நோக்கம் சீனாவுக்கு கிடையாது. மற்ற நாடுகளுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக் கொள்ளவே முயற்சிப்போம்.
இவ்வாறு ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.