பானிபூரி பையன் டூ ஐபிஎல் ஸ்டார்... ராஜஸ்தான் ஓப்பன் யார் இந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால்?!
சிஎஸ்கே அணிக்கு எதிரான நேற்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் ஓப்பனராக களமிறங்கியவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் இன்று பெரிதாக சோபிக்க தவறினாலும், இவரைப் பற்றி ஆச்சரியமான தகவல்கள் நெட்டிசன்களை நெகிழவைத்துள்ளது. இந்த ஜெய்ஸ்வால் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பே நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டுள்ளார். இதே யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்று சதம் அடித்து அசத்தினார்.
யார் இந்த ஜெய்ஸ்வால்?!
உத்தரப்பிரதேசதச மாநிலத்தின் பதோஹிதான் இவரின் சொந்த ஊர். ஜெய்ஸ்வாலின் குடும்பம் மிகவும் சாதாரண குடும்பம். வறுமையின் காரணமாக பதோஹியில் இருந்து மும்பைக்குப் பிழைப்புத் தேடிக் குடிபெயர்ந்தது ஜெய்ஸ்வாலின் குடும்பம். அப்போது அவருக்கு வயது 11. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஜெய்ஸ்வாலுக்கு மிகுந்த ஆர்வம்.ஆனால் வறுமையின் காரணமாக, முழு நேரமும் இவரால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. வேலைக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மும்பை முஸ்லிம் யுனைடெட் மைதானம் அருகே பிளாஸ்டிக் தார்ப்பாயில் குடிசை அமைத்து அதில் தங்கிக்கொண்டு, ஜுவாலா சிங் எனும் கோச்சிடம் பயிற்சிபெற்றுக் கொண்டு, கிரிக்கெட் விளையாடும் நேரம் போக, மற்ற நேரத்தில் பானி பூரி தயாரிக்கும் ஒரு கடையில் வேலை பார்த்துவந்துள்ளார். ஜெய்ஸ்வாலின் திறமையைப் பார்த்த, அவரின் பயிற்சியாளர் அவரை, மூத்த அணி வீரர்களுடன் விளையாட வைத்திருக்கிறார். எந்தப் பயமும் இல்லாமல் அதனை எதிர்கொண்டு, கோச்சின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அதன் பயனாக,கடந்த 2015-ல் நடந்த கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தேடிவந்தது. அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் விளாசிய ரன்கள் எவ்வளவு தெரியுமா.. 319 ரன்கள். அதன்பின், விஜய் ஹசாரே போட்டியில் 154 பந்துகளில் 203 ரன்கள் எனக் கிடைக்கிற வாய்ப்பில் முத்திரை பதிக்க,19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் சதம் உள்பட 312 ரன்கள் குவித்து இந்திய அணியைத் தலைநிமிர வைத்தார் ஜெய்ஸ்வால். இதையடுத்து அவரின் திறமையைப் பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ.2.40 கோடிக்கு அவரை விலைக்கு வாங்கி தற்போது முதல் போட்டியில் ஓப்பனராக களமிறக்கி, முதல் பந்தையும் சந்திக்க வைத்துள்ளது. இன்றைய போட்டியில் அவ்வளவாக சோபிக்க தவறினாலும், வரும் போட்டிகளில் முத்திரை பதித்து இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக மாறுவார் என்று வாழ்த்துவோம்.