அன்னமிடும் கை: ஆட்சியரின் கரிசனையால் நெகிழும் மக்கள்..!
குறை தீர்ப்பு மனுக்களைச் சமர்ப்பிக்க வரும் மக்களைப் பசியாற வைக்கும் ஆட்சியரின் கரிசனை கண்டு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் அவரை வாழ்த்துகின்றனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் மனுக்களை வாங்கும் குறைதீர் நாள் அனுசரிக்கப்படும். அன்றைய தினத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் மாவட்ட ஆட்சியரின் மனுக்களைக் கொடுக்க வருவது வழக்கம். விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்று விளிம்புநிலை மக்கள் ஆட்சியரைச் சந்திக்க வருவர். ஏறத்தாழ நூறு கிலோ மீட்டர் பயணம் செய்தும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு வழங்க வந்திருந்த மக்களை அதிகாரிகள், இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டனர். மனு அளிக்க வந்திருந்த அறுநூற்றுக்கும் அதிகமான மக்கள் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர்.
திருவண்ணாமலை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, ஏழை, எளிய மக்கள் மீது கொண்ட கரிசனையால் இம்முயற்சியைத் தொடங்கியுள்ளார். ரூ. 15 லட்சம் செலவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு சமையலறை கட்டப்பட்டுள்ளது. அதற்கான சமையல் உபகரணங்கள் ரூ.50,000/-க்கு வாங்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகத்திலிருந்து இரண்டு மூடை அரிசி, வேளாண் சந்தை குழுக்களிடமிருந்து காய்கறிகள், கூட்டுறவுத் துறையினரிடமிருந்து சமையல் பொருள்கள் உள்ளிட்டவற்றைப் பெறப்படுவதாகத் தெரிகிறது.
இதற்கு 'இறைவனின் சமையலறை' என்று பெயரிடப்பட்டுள்ளது. வாரந்தோறும் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு மட்டும் தற்போது சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு நடைபெறு சிறப்பு முகாமிலும் இந்த சமையலறையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியின் இந்த நன்முயற்சி மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.