டிராப் செய்யப்பட்ட ரஜினி படம் மீண்டும் உருவாகுமா...? இயக்குனரிடம் மீண்டும் கதை கேட்டார் சூப்பர் ஸ்டார்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ராணா என்ற படத்தை கே.எஸ்.ரவி குமார் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு படமாக்க திட்டமிட்டார். அதற்கான படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கின. சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்படம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.ரஜினிகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தார். அங்குள்ள மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.
அதன் பிறகு சிறிது காலம் ஓய்விலிருந்தார். ராணா படம் டிராப் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா கோச்சடையான் படத்தை இயக்க அதில் ரஜினிகாந்த் நடித்தார்.இப்படத்தில் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குனர் மேற்பார்வை பொறுப்பு ஏற்றிருந்தார். பிறகு தர்பார், பேட்ட போன்ற படங்களில் நடித்தார் ரஜினி. ராணா படம் பற்றிய பேச்சே இல்லை.
இந்நிலையில், ராணா படம் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றதற்கு இயக்குனர் ரவிக்குமார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: எந்திரன் மற்றும் தசாவதாரத்திற்கு பிறகு, ரஜினி சாருக்கும் எனக்கும் அடுத்த பெரிய படமாக ராணா இருந்திருக்க வேண்டும். இது ஒரு வரலாற்று பின்னணியிலனான கதை மட்டுமல்லாமல் பல்வேறு புது பரிசோதனைகளுக்கும் இடம் அளிப்பதாக இருந்தது. ஆனால் எங்களால் அதை உருவாக்க முடியவில்லை. அதன்பிறகு தான் நாங்கள் கோச்சடையானில் பணிபுரிந்தோம். இது ராணாவுக்கு ஒரு முந்தைய கதை, அதாவது ப்ரிகுவல் படமாக உருவாக்கப்பட்டது. இது ஒரு நல்ல கதையைக் கொண்டிருந்தது மற்றும் ராணாவின் கதைக்கு வழிவகுத்தது. ஆனால் உடல் பாதிப்பிலிருந்து குணம் அடைந்திருந்த ரஜினிசாருக்கு நான் அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.
இன்றைக்கும் ராணா பட ஸ்கிரிப்டை மறுபரிசீலனை செய்கிறேன். மீண்டும் 6 மாத்துக்கு முன் ராணா படக் கதையை அவரிடம் விவரிக்கும் படி அவர் என்னிடம் கேட்டார். அதைக் கேட்டதும், இப்போ நம்மலா பண்ண முடியுமா? என்று கேட்டார், அது சாத்தியம் என்று சொன்னேன். ஆனால் அவர் மனதில் அரசியல் வைத்திருந்தார். மேலும் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் இதனைத் தயாரிக்க முடியும் இருக்கிறதா என்று தனக்குத் தெரியாது என்று கூறினார். ராணா படத்தில் ரஜினி நடித்தால் நன்றாக இருக்கம், ஆனால் ராணா படத்துக்கென்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது, இவ்வாறு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார்.