கொரோனாவுக்கு எளிய சோதனை: எங்கே அறிமுகம் தெரியுமா?
கொரோனாவுக்கான பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நாடுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் படிப்படியாக பல்வேறு செயல்பாடுகளை அனுமதித்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் மக்கள் குவிந்து வரும் நிலையில் கனடா, எளிய சோதனை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
பள்ளிக் குழந்தைகள்
கனடாவில் பள்ளிகள் திறக்கப்பட ஆரம்பித்துள்ளன. அறிகுறி இல்லாத நிலை மற்றும் குறைந்த அறிகுறிகள் கொண்ட பள்ளி சிறார் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கொப்புளித்து உமிழ்தல்
மூக்கு மற்றும் வாயிலிருந்து மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். குழந்தைகள் இந்த சோதனைகளைச் செய்வதற்குச் சிரமப்படுவர். ஆகவே, கொப்புளித்து உமிழ்தல் முறை சோதனை கனடாவில் செய்யப்படுகிறது.இதன்படி குழந்தைகள் காலையில் பல் துலக்காமல், அதாவது எதுவும் சாப்பிடாத வேளையில் சலைன் (saline) திரவத்தை வாயினுள் விட்டு எல்லா இடங்களிலும் படும்படி குறைந்தது 30 விநாடிகள் கொப்புளித்து பின்னர் அதை ஆய்வுக்குழாய் ஒன்றில் உமிழவேண்டும்.
இந்த உமிழ்நீர் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதித்து கொரோனா தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என்று கூறப்படுகிறது.இந்த சோதனையைச் சரியாகச் செய்ய இயலாத குழந்தைகள் அல்லது முடிவு சரியாக வரவில்லையென்றால் மூக்கு, வாயில் மாதிரி சேகரிக்கும் முறை கையாளப்படும்.