சரத்பவாருக்கு ஐ.டி. நோட்டீஸ்.. தேர்தல் கமிஷன் விளக்கம்..

சரத்பவாருக்கு வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீசுக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து சரத்பவார் கூறுகையில், கடந்த 2014- 2020 இடையே நடந்த ராஜ்யசபா தேர்தல்களின் போது எனது அபிடவிட்டில் ரூ.32.1 கோடி சொத்து உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த அடிப்படையில் ஏதோ சில விளக்கங்களைக் கேட்டு இப்போது திடீரென வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட நாளைக்குள் விளக்கம் தராவிட்டால் தினமும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மத்திய பாஜக அரசுக்கு எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் மீது உள்ள அன்பை இது காட்டுகிறது என்று தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தின் தகவலின் பேரில்தான், வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், ஆணையம் இன்று(செப்.23) அதை மறுத்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சரத்பவாருக்கு வருமானவரித் துறையினர் அனுப்பிய நோட்டீசுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் நடவடிக்கைக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியிருக்கிறது.

முன்னதாக, ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சரத்பவார் கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படியொரு ராஜ்யசபா துணைத் தலைவரை(ஹரிவன்ஷ்) நான் பார்த்ததே இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள், விதிகளைச் சுட்டிக்காட்டிய போது அதை அவர் பொருட்படுத்தவே இல்லை. வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய விதம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தார்.

More News >>