சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் தான் சென்னை தோற்க முக்கிய காரணமாகும். லாக்டவுன் காலத்தில் தன்னுடைய இடைவிடாத பயிற்சியே தனது அதிரடி ஆட்டத்திற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.கேரளாவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சனிடம், உங்களது வளர்ச்சிக்குக் காரணம் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு அவர் கூறும் பதில் என்ன தெரியுமா? ராகுல் திராவிட தான் எனக்கு எல்லாம் என்பார். திராவிட கொடுத்த ஊக்கமும், பயிற்சியும் தான் சாம்சனின் அதிரடி ஆட்டத்திற்குக் காரணம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான திராவிட, சஞ்சுவுக்கு பல வாய்ப்புகளை அளித்தார். திராவிட் மட்டுமல்ல முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் உள்படப் பல வீரர்கள், இந்திய அணியில் சஞ்சுவுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று கூறிவந்தனர். 'தல' தோனி இந்திய அணியில் பரபரப்பாக இருக்கும் போதே சஞ்சுவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் இந்திய அணியில் எப்போதாவது தான் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சென்னையுடன் நடந்த போட்டியில் சஞ்சுவின் அதிரடி ஆட்டம் அனைவருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் இவர் 32 பந்தில் 74 ரன்கள் குவித்தார். அதில் சிக்சர்கள் மட்டுமே 9 என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர், கௌதம் கம்பீர் உள்படப் பலர் சஞ்சுவின் அதிரடி ஆட்டத்தை வியந்து பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கு என்ன காரணம் என்பதை சஞ்சு வெளிப்படுத்தியுள்ளார்.
லாக்டவுன் காலத்தில் நான் வீட்டில் சும்மா இருக்கவில்லை. தினமும் திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்று பயிற்சி செய்தேன். ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் எடுத்த பயிற்சியால் தான் நேற்று என்னால் மிகச் சிறப்பாக விளையாட முடிந்தது. என்னுடைய ஆட்டத்தைப் பாராட்டி பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். நான் சிறப்பாக பேட்டிங் பயிற்சி பெறக் கேரள ரஞ்சி வீரரான ரைபி வின்சன்ட் கோமஸ் தான் காரணம். அவர் எனக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சி அளிக்கப் பெரிதும் உதவினார். அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் சஞ்சு சாம்சன்.