கொரோனா பரவல் அதிகரிப்பு இந்தியாவுக்கான விமான சர்வீசை நிறுத்தியது சவுதி
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தியாவுக்கான விமான சர்வீசை சவுதி அரேபியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் மிக அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவி வருகிறது.
தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை 56 லட்சத்தைத் தாண்டிவிட்டது. மரண எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட மாநிலங்களில் நோயாளிகள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.ஊரடங்கு காரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்கள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர். இதுவரை பல லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர். இதில் உடல் நலம் குன்றியவர்கள், விசா காலாவதியானவர்கள், கர்ப்பிணிகள் உள்பட ஏராளமானோர் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான விமான சர்வீசை தற்காலிகமாக நிறுத்திவைக்கச் சவுதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்த மற்றும் இந்தியாவிலிருந்து சவுதி செல்ல தயாராக இருந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இயக்கப்படும் விமானங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் எனச் சவுதி சிவில் விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சவுதியில் வேலை இழந்த ஏராளமானோர் இந்தியாவுக்கு வரக் காத்துக்கொண்டிருந்தனர். இதேபோல இந்தியாவிலிருந்து சவுதிக்கு வேலைக்காகத் திரும்பிச் செல்வதற்கும் ஏராளமானோர் தயாராக இருந்தனர். சவுதி அரசின் இந்த உத்தரவு இவர்கள் அனைவரையும் பாதித்துள்ளது. இந்தியா மட்டுமில்லாமல் பிரேசில், அர்ஜெண்டினா உட்பட நாடுகளுக்குமான விமான சர்வீசையும் சவுதி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மற்ற நாடுகளிலிருந்து இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு இரண்டு வாரத்திற்குள் சென்று வந்தவர்களுக்கும் சவுதி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.