தேசிய ஜனநாயக கூட்டணிக்கு புது அர்த்தம் சொல்லும் சசிதரூர்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான என் டிஏவுக்கு 'நோ டேட்டா அவைலபிள்' என்று புதிய அர்த்தம் கூறுகிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயங்களை எடுத்துப் போட்டுப் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். எதிர்க்கட்சிகளில் மட்டுமில்லாமல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இவர் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சியில் தற்போது தற்காலிக தலைவர் பொறுப்பு தான் உள்ளது. எனவே நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் சிலர் குரல் எழுப்பினர்.

இந்த திடீர் எதிர்ப்புக் குரலுக்கு சசிதரூர் தான் காரணம் எனப் பின்னர் கூறப்பட்டது. சில தலைவர்களின் இந்த திடீர் எதிர்ப்பு சோனியா காந்திக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.இடையிடையே இவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்வது உண்டு. இந்தியாவில் பாஜக ஆட்சியில் ஏற்பட்ட ஒரே ஒரு வளர்ச்சி பிரதமர் மோடியின் தாடி மட்டும் தான் என்று கூறி மோடியை நக்கல் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது இவர் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் கிண்டல் செய்து தனது டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர் டிவிட்டரில் கூறியிருப்பது: பாஜக கூட்டணியான என்டிஏ (NDA) என்றால் 'நோ டேட்டா அவைலபிள்' என்று தான் அர்த்தமாகும். நாடாளுமன்றத்தில் எந்த விவரத்தைக் கேட்டாலும் அந்த விவரம் தங்களிடம் இல்லை என்றுதான் மோடியும், அமைச்சர்களும் கூறுகின்றனர். லாக்டவுன் சமயத்தில் எத்தனை வெளிமாநில தொழிலாளர்கள் இறந்தனர், தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை உட்படப் பல கணக்கு விவரங்களைக் கேட்கும்போதெல்லாம் அந்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்று கையை விரிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் குறித்தும், ஜிடிபி வளர்ச்சி குறித்தும் கேட்டால் தவறான தகவல்களைத் தருகிறார்கள் என்று சசி தரூர் எம்பி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது டிவிட்டரில் மோடி, நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோரின் ஒரு கார்ட்டூனையும் வெளியிட்டுள்ளார்.

More News >>