அபுதாபி குடிகாரர்களுக்கு புதிய விதி? என்ன அது ?.. குடி மக்கள் மகிழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் மது வாங்குவதற்கும், மது அருந்துவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, குடிபோதையில் பொது இடங்களில் நடமாடுவது ஆகியவை இங்கு கடுமையான குற்றமாகும். இதை மீறுபவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை அபராதமும், சிறைத் தண்டனையும் கிடைக்கும். அமீரக தலைநகரான அபுதாபியில் இதுவரை லைசென்ஸ் இருந்தால் மட்டுமே மது வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.

'பிரைமரி' மற்றும் 'பேசிக்' என இரண்டு வகையான லைசென்ஸ்கள் அமலில் இருந்தன. குறைந்தது 3000 திர்ஹம் சம்பளம் வாங்குபவர்களுக்கு பிரைமரி லைசென்ஸ் கிடைக்கும். சம்பளத்தில் 10 முதல் 20% வரை உள்ள தொகைக்கு மட்டுமே மது வாங்க முடியும். 'பேசிக்' லைசென்ஸ் எடுப்பவர்களுக்கு சம்பள கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆனால் மாதத்தில் 200 திர்ஹமுக்கு மட்டுமே மது வாங்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட பார்களிலோ, ரெஸ்டாரன்டுகளிலோ சென்று மது வாங்குவதற்கு லைசென்ஸ் எதுவும் தேவையில்லை. ஆனால் அங்கு மது வாங்கும் பில்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தற்போது அபுதாபியில் மது வாங்குவதற்கான இந்த லைசென்ஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி 21 வயதுக்கு மேல் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் லைசென்ஸ் இல்லாமல் மது வாங்கலாம். தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே மது வாங்க முடியும். விற்கவோ சேகரித்து வைக்கவோ கூடாது. தங்கும் இடத்திலும், அங்கீகரிக்கப்பட்ட ஓட்டலிலும், சுற்றுலா தலங்களிலும் இருந்து மது அருந்தலாம். எந்த காரணம் கொண்டும் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது. அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

துபாயில் லைசென்ஸ் முறை அமலில் இருந்தாலும் கடினமான நிபந்தனைகள் எதுவும் கிடையாது. மதுக் கடைகளுக்கு சென்று அமீரக அடையாள அட்டை மற்றும் 270 திர்ஹம் கொடுத்தால் லைசென்ஸ் கிடைக்கும். சுற்றுலாப் பயணிகள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் விசாவை காண்பித்து தற்காலிக லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சார்ஜாவில் மது வாங்கவோ, விற்கவோ, உபயோகிக்கவோ கூடாது.

More News >>